தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், காரிமங்கலம் போலீசார் நேற்று பிற்பகல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்ஸ்டாண்ட், கடைவீதி, இராமசாமி கோயில், அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்ட போது, காரிமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஒருவர், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனே அவரை பிடித்து விசாரித்ததில், அவர் காரிமங்கலம் மேல் தெருவைச் சேர்ந்த ஜீவன் (27) என்பதும், வெளிமாநில லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்து, அவர் வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.