பாலக்கோடு, ஜூலை 18 | ஆடி 03 -
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகேயுள்ள மன்னார் கொட்டாய் கிராமத்தில், 40 ஆண்டுகளாக வசித்து விவசாயம் செய்து வரும் குடும்பத்தினர், தந்தை விற்ற நிலத்தை அபகரிக்க ஒரு பெண் முயன்றதாகக் கூறி கொடூர புகாரை எழுப்பியுள்ளனர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த மன்னார் என்பவர், கடந்த 1980களில் ராயக்கோட்டையைச் சேர்ந்த நாராயணன் என்றவரிடமிருந்து 2 ஏக்கர் நிலத்தை ₹36,000க்கு வாங்கி, மூல பத்திரம் மற்றும் கிரய ஒப்பந்த பத்திரத்துடன் விவசாயம் செய்து வந்தார். நில உரிமை ஒப்படைக்கும் வேலைகளுக்குள் நுழையவிருக்கும் போதே நாராயணன் திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது வாரிசுகள் இல்லை என்பதால், அந்த நிலத்தை மன்னார் குடும்பம் சட்டபூர்வமாக பூரண உரிமையுடன் பயன்படுத்தி வந்துள்ளனர்.
மன்னாரின் மகன்கள் முனுசாமி, ஆறுமுகம், சின்னத்தம்பி, சேகர், சிவம் மற்றும் அவரது மகள்கள் என 8 குடும்பத்தினர், அந்த நிலத்தில் வீடு கட்டி வசித்து வருவதுடன், அந்நிலத்தில் விவசாயமும் செய்து வருகின்றனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நாராயணனின் தத்துமகள் என கூறும் நாகேஸ்வரி என்பவர் ராயக்கோட்டையில் இருப்பது தெரியவந்துள்ளது. இவரிடம் நிலத்தை கிரயம் செய்து தருமாறு மன்னார் குடும்பத்தினர் கேட்டபோது, ஆரம்பத்தில் சம்மதித்த நாகேஸ்வரி, பின்னர் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர்கள் மற்றும் அடியாட்கள் உதவியுடன், அந்த இடத்தை வலுக்கட்டாயமாக காலி செய்ய பலமுறை முயன்றுள்ளார் என்றும், இரவு நேரங்களில் அடியாட்கள் வந்து அழித்து கொல்லும் வகையில் மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றும் புகார் கூறப்பட்டுள்ளது.
பழனிவேல் மற்றும் கனகா ஆகியோர் கூறியதாவது:
“நாங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலத்தில் வாழ்ந்து விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலத்திற்கு உரிய மூல பத்திரம், கிரய ஒப்பந்த பத்திரம் எங்களிடம் இருக்கின்றன. ஆனால், கடந்த மே மாதத்தில் மாரண்டஅள்ளி பத்திர பதிவு அலுவலகத்தில், நாகேஸ்வரி இந்நிலத்தை வேறு ஒருவருக்குப் பதிவு செய்துள்ளார். கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் அடியாட்கள் வந்து எங்களிடம் இடத்தை காலி செய்யக் கூறி, மிரட்டல் விடுத்து வருகின்றனர். 'காலி செய்யாவிட்டால் கொலை செய்கிறோம்' எனச் சொல்வது மிகவும் பயமுறுத்துவதாக உள்ளது.”
இது தொடர்பாக, தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து, நில உரிமையை பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகள் மற்றும் போலீசார் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.