காரிமங்கலம், ஜூலை 18 | ஆடி 03 -
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் திமுக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், “ஓரணியில் தமிழ்நாடு” என்ற தொனிப்பொருளில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் திரு. பழனியப்பன் அவர்கள் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தொகுதி பார்வையாளர் திரு. அரியப்பன், மாவட்ட பொருளாளர் திரு. முருகன், மாவட்ட துணைச் செயலாளர் திருமதி. ராஜகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் முக்கிய நோக்கம், திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ள புதிய உறுப்பினர் சேர்க்கை பணிகளை செயல்படுத்துவது குறித்தேதான். இதில் 40% புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டு, 18 வயது முடித்த அனைத்து புதிய உறுப்பினர்களையும் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளும் முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள், மாநில மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய மற்றும் பேரூராட்சி திமுக செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை பகிர்ந்தனர்.