தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள இண்டூர், சோமனஅள்ளி மற்றும் மல்லாபுரம் ஏரிகளில் கரை பலப்படுத்துதல் மற்றும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.07.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 251 கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான 546 ஏரிகளில், சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல், உள்வரப்பு மற்றும் வெளியேறும் கால்வாய்களின் தூர்வாருதல், ஏரிக்கரை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
இன்றைய நிகழ்வில், நல்லம்பள்ளி வட்டத்தில் 53.10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இண்டூர் ஏரியில் ஆதி பவுண்டேசன் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் ரூ.40.00 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, 10.10 ஏக்கர் பரப்பளவுள்ள சோமனஅள்ளி ஏரியில் அக்னி சிறகுகள் தன்னார்வலர்கள் மூலம் ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டிலும், 9.15 ஏக்கர் பரப்பளவுள்ள மல்லாபுரம் ஏரியில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் பொதுமக்கள் தங்களுடைய சொத்தாக கருதி, குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை வீசாமல் பாதுகாக்க வேண்டும் என்றும், ஏரிகளில் தூர்வாரும் பணிகளை முழுமையாக முடித்து, பருவமழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.
பின்னர், பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். பொது மருத்துவம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, மருந்துகள் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளிடம் அக்கறையுடனும் பரிவுடனும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.