தருமபுரி மாவட்டம், பொம்மிடி ஊராட்சிக்குட்பட்ட வடசந்தையூரில் கடந்த ஆண்டு பொதுமக்கள் நலனுக்காக மரகத பூஞ்சோலை பூங்கா அமைக்கப்பட்டது. நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடவும் வசதியாக உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் நடைபாதை கற்கள் பதிக்கும் பணி சிதறிய நிலையில் நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.
திட்டத்தின் அடிப்படையில் நடைபாதை முழுவதும் சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட வேண்டும் என்பதாய் இருந்தும், தற்போது பூங்காவின் முகப்புப் பகுதியில் மட்டும் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு, பிற பகுதிகள் பறிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இதனால் அரசு நிதி முறையாக பயன்படுத்தப்பட்டதா? ஒப்பந்ததாரர் பணியை முழுமையாக செய்தாரா? என்பது குறித்து கேள்விகள் எழுகின்றன. இதற்கு மேலாக, பணிகள் முழுமையடையாத நிலையில் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கி விட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை மாநில துணைத் தலைவர் பா.ஜெபசிங் கூறியதாவது, அரசு நிதி முறையாக செலவிடப்பட்டதா என்பதற்கு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகள் தவறான முறையில் செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. மேலும், பணி முறையாக செய்யப்படாத நிலையில் பணம் செலுத்தப்பட்டிருந்தால், அதற்காக பொறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.