தருமபுரி, ஜூலை 7 (ஆனி 23) -
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று முக்கிய நிகழ்வு ஒன்றாக, மாவட்டத்தில் ரூ.12.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 11 புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் உயர் மருத்துவ உபகரணங்கள் திறக்கப்பட்டன. விழாவினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஷ் தலைமையிலில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், ஜி.கே.மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் ஒரு பகுதியாக 88 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டங்கள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், தருமபுரி அரசு மருத்துவமனையில் புதிய MRI கருவி, கட்டண படுக்கை பிரிவு, தாய் மற்றும் பச்சிளம் குழந்தை பிரிவுகள், பாளையம்புதூரில் வட்டார சுகாதார அலுவலகம், மற்றும் பல இடங்களில் புதிய துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் திறக்கப்பட்டன. அமைச்சர் மா. சுப்பிரமணியன் உரையாற்றியபோது, கடந்த சில ஆண்டுகளில் மாநிலத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துக்காட்டினார். தருமபுரி மருத்துவக் கல்லூரிக்கு தனி நிதி ஒதுக்கீடுகள், புற்றுநோய் சிகிச்சை பிரிவுகள், ஸ்கேன் கருவிகள் உள்ளிட்டவை விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மக்களுக்காக செயல்படுத்தப்படும் 'இதயம் காப்போம்' மற்றும் ‘இன்னுயிர் காப்போம் - 48 மணி நேர அவசர சேவை’ திட்டங்களின் பயன்கள் குறித்து விரிவாக கூறினார். இதுவரை தருமபுரி மாவட்டத்தில் சுமார் 4.2 லட்சம் பேர் அரசு மருத்துவ சேவைகளை பயன் பெற்றுள்ளனர் என்றார்.
இந்த விழாவில் மருத்துவக்கல்வி இயக்குநர் தேரணிராஜன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, முதல்வர் சிவக்குமார், மருத்துவர் பூபேஷ், தாமோதரன், ரமேஷ்பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.