தருமபுரி, ஜூலை 9 (ஆனி 24)
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்த 52 வயது கூலித்தொழிலாளி காயின் ராம், தமிழ்நாட்டில் வேலைக்காக ரயிலில் பயணித்த போது தாசம்பட்டி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் அவரது ஆதார் அட்டையும் ரயில் டிக்கெட்டும் மூலம் முகவரியை கண்டறிந்து அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் ஏழ்மையின் காரணமாக உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், 'மை தருமபுரி அமரர் சேவை' அமைப்பினர், அவரது உடலை தருமபுரி பச்சையம்மன் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.
நிகழ்வில், சேலம் ரயில்வே போலீசாரும், மை தருமபுரி அமைப்புத் தலைவர் சதீஷ் குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் செந்தில் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இது மை தருமபுரி அமைப்பின் 147வது நல்லடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.