பென்னாகரம், ஜூலை 15:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வெடிவைத்து வேட்டையாடிய நால்வரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உட்பட்ட பென்னாகரம் காவல் சுற்றுக்காடுகளில் வனவிலங்குகள் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, வனசரக அலுவலர் சிவக்குமார், வனவர் சுதாகர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டுப்பன்றியை வெடிவைத்து வேட்டையாடிய மாமிசம் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக எரங்காடு பகுதியைச் சேர்ந்த பாரத் (24), சின்னதும்கல் பகுதியைச் சேர்ந்த சிவசக்தி (23), பெரியசாமி (46), மற்றும் குழிப்பட்டியைச் சேர்ந்த வீரமணி (24) ஆகிய நால்வரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து வேட்டைக்காக பயன்படுத்திய வெடிப்பொருட்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் பென்னாகரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தர்மபுரி மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து விலங்குகளை வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்யும்Os பேரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.