தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே, எள்ளுக்கான நியாயமான விலையை கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பென்னாகரம் வேளாண்மை விற்பனை நிலையத்தில் முதன்முறையாக எள் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பின்பேரில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைவித்த எள்ளை கொண்டு வந்தனர். ஆனால், கொள்முதல் நேரத்தில் வெளியூர் வியாபாரிகளை தவிர்த்து உள்ளூர் தானிய விற்பனையாளர் மூலம் குறைந்த விலையில் (₹80 - ₹114) நிர்ணயம் செய்யப்பட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து அம்பேத்கர் சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் காவல்துணை கண்காணிப்பாளர் சபாபதி பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு விவசாயிகள் சாலை மறியலை நிறுத்தினர். இதன் காரணமாக, பென்னாகரம்-தருமபுரி சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து தடைப்பட்டது.