தருமபுரி, ஜூலை 27 | ஆடி 11 -
தருமபுரி மாவட்டத்தில், மிச்சம் வைத்த மதுபான பாட்டிலை பாவனை செய்த கட்டிடத் தொழிலாளர்கள் மூவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சியில் வெளியான செய்தி தொடர்பாக காவல்துறை விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் அதகப்பாடி, சின்னத்தடங்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவன் (வயது 37) என்பவர், கடந்த ஜூலை 26ஆம் தேதி, அதே ஊரைச் சேர்ந்த சடகோபன் என்பவரிடம் இருந்து தொலைபேசியில் தகவல் பெற்றுள்ளார். அவரது நிலப்பகுதியில் மதுபான பாட்டில், குளிர்பானம், சிப்ஸ், பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவை ஒரு நெகிழி பையில் இருப்பதாக தகவல் தெரிவித்ததன் பேரில், சஞ்சீவன் அந்த பொருட்களை வேலைக்கு எடுத்துச் சென்றார்.
பின்னர், பென்னாகரம்–தருமபுரி சாலையில் உள்ள கட்டிட பணியில், மதுபானத்தில் குளிர்பானம் கலந்து தனது இரு நண்பர்களான மாது (த/பெ பெருமாள்), சக்திவேல் (த/பெ அங்கப்பன்) ஆகியோருக்கும் வழங்கியுள்ளார். இதில் சக்திவேல் சிறிதளவு குடித்தவுடன் கெட்ட வாடை வந்ததால் கீழே ஊற்றி விட்டு விலகினார். அதன்பின் மாதுவுக்கு கை, கால் நடுக்கம் மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சஞ்சீவனும் அதேபோன்ற நிலையை அனுபவித்ததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் சக்திவேலும் மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சஞ்சீவன், “நாங்கள் குடித்த மதுவில் விஷம் கலந்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், தருமபுரி காவல் நிலையத்தில் குற்ற எண் 434/2025 ஆக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.