நல்லம்பள்ளி, ஜூலை 19 | ஆடி 03 -
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாலஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஈச்சம்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈச்சம்பட்டி ஏரியின் கரை பலப்படுத்துதல் மற்றும் புனரமைப்பு பணிகள் ரூ.5.25 இலட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வருகின்றன. இந்தப் பணிகள் மூலம் ஏரியின் உள்வரப்புகள் மற்றும் வெளிச்செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, சீரமைக்கப்படுகின்றன. மேலும், ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, நீர் சேமிப்பு திறனை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்பட வேண்டும் என ஆட்சித்தலைவர் அலுவலர்களுக்கு நேரில் அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10.81 இலட்சம் மதிப்பீட்டில் ஈச்சம்பட்டி சுடுகாடு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சுற்றுச்சுவர் அமைத்தல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான காத்திருப்போர் கூடம், குடிநீர் தேவைக்காக கைப்பம்பு அமைத்தல் மற்றும் சுடுகாடு நுழைவில் 30 மீட்டர் நீளத்தில் கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இடம்பெற்றுள்ளன.
மாவட்ட ஆட்சித்தலைவர் இந்த அனைத்து பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், மேற்கொண்டுள்ள பணிகள் பொதுமக்களுக்கு பயனளிக்குமாறு உறுதி செய்ய வேண்டும் என்றும், தரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு ஆகியவற்றை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு. விமல் ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. இளங்குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று துணை நின்றனர்.