ஒகேனக்கல்ம் ஜூலை 20 | ஆடி 04 -
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்ததை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதன் விளைவாக உபரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கலில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.
நேற்று 32,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 43,000 கனஅடியாக உயர்ந்ததால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிஃபால்ஸ் போன்ற அருவிகளில் தண்ணீர் வேகமாக கொட்டிக்கொண்டு ஓடுகிறது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் புதிய உத்தரவை விடுத்துள்ளது. வார விடுமுறை நாடான இன்று, சுற்றுலா வந்த பலர் தடை அறிவிப்பால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.