பாலக்கோடு, ஜூலை 28 | ஆடி 12 -
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சிக்கார்தனஅள்ளி கிராமத்தில் உள்ள கரக செல்லியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் குத்தகை விவகாரம் தொடர்பாக நேற்று (ஜூலை 29) ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம், அறநிலையத் துறை ஆய்வாளர் கோமதி தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்கள் கூட்டத்தில் தெரிவித்ததாவது, கரக செல்லியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 33 ஏக்கர் 42 சென்ட் நிலம், சில தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கோயிலுக்கு வரவேண்டிய வருமானம் குறைந்து, பராமரிப்பு பணிகள் மற்றும் வழக்கமான பூஜைகள் செய்ய முடியாமல் போயுள்ளதாக கூறினர்.
மேலும், இந்நிலங்கள் பொதுமக்களுக்கு ஏலம் விட நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தும், ஏன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த ஆய்வாளர் கோமதி, 15 நாட்களுக்குள் பொது ஏலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஊர்கவுண்டர்கள், மந்திரி கவுண்டர், ஊர் கோம்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதளவில் பங்கேற்று தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்.