தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் உள் வட்டம், சோமனஅள்ளி கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் ரூ.28.74 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் மொத்தம் 77 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மணி அவர்கள் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முக்கியமாக வழங்கப்பட்ட உதவிகள்:
-
வருவாய்துறை சார்பில் 15 பேருக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா
-
இயற்கை மரணம், ஈமசடங்கு நிதி உதவிக்கு 4 பேருக்கு ரூ.87,500
-
குடும்ப அட்டைகள் – 40 பேருக்கு
-
வேளாண்மைத் துறை சார்பில் 4 பேருக்கு ரூ.36,000 மதிப்பில் துவரை செயல் விளக்க உதவிகள்
-
தோட்டக்கலைத் துறை சார்பில் 3 பேருக்கு ரூ.4.49 லட்சம் மதிப்பில் மா, தக்காளி பரப்பு திட்டம் மற்றும் சொட்டு நீர் பாசன கருவிகள்
-
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 9 பேருக்கு ரூ.6.60 லட்சம் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள்
-
வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2 பேருக்கு ரூ.2.32 லட்சம் மதிப்பில் பவர் டில்லர் கருவிகள்
முகாமை தொடங்குவதற்கு முன், மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு அரசு துறைகளின் கண்காட்சிகளை பார்வையிட்டார். இதில் வருவாய்துறை, மீன்வளத்துறை, வேளாண்மை, தோட்டக்கலை, மகளிர் திட்டம், மருத்துவம், சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகள் கலந்து கொண்டன.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், வருவாய் கோட்டாட்சியர் இரா. காயத்ரி, மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் உரிய கள ஆய்வுகளுடன் பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி அளித்தார்.