பொம்மிடி, ஜூலை 24 | ஆடி 08 -
தருமபுரி மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக உள்ள பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தங்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பாக தொடர்ந்து பல்வேறு நிலைகளில் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சமீபத்தில் சேலம் கோட்ட மேலாளர் ஆய்வுக்காக பொம்மிடி வந்தபோது சங்கத்தினர் அவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்தும், ஜூலை 24 ஆம் தேதி சங்கத்தின் பொருளாளர் திரு. முனிரத்தினம், துணைத் தலைவர் திருமதி. சங்கீதா மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு. வெங்கடேசன் ஆகியோர் சேலம் ரயில்வே கோட்டத்தில் முதுநிலை வணிக மேலாளர் திரு. வாசுதேவன் அவர்களை நேரில் சந்தித்து, பொதுமக்கள் எதிர்பார்ப்பு, நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் ரயில் நிறுத்தங்கள் தொடர்பாக விரிவாக விவாதித்து மனு வழங்கினர்.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட கோட்ட வணிக மேலாளர், அதில் குறிப்பிடப்பட்ட அம்சங்களை ஆய்வு செய்து, தேவையான பரிந்துரைகள் அளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார். பொம்மிடி போன்ற வளர்ந்து வரும் நகரத்தில் கூடுதல் ரயில் நிறுத்தங்கள் வழங்கப்படுவதால், பயணிகள் மற்றும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.