தருமபுரி, ஜூலை 24 | ஆடி 08 -
தருமபுரி மாவட்டம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதரவற்ற மற்றும் பராமரிப்பு தேவையுடைய குழந்தைகளுக்காக இன்று (24.07.2025) சிறப்பு ஆதார் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாம், SAATHI திட்டத்தின் (Survey for Aadhar and Access to Tracking and Holistic Inclusion – 2025) ஒரு பகுதியாக, தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி திருமதி ஊ. திருமகள் அவர்களின் பரிந்துரையின்படி நடத்தப்பட்டது.
முகாமில் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி திரு. சு. ஸ்ரீதரன், மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/சார்பு நீதிபதி திருமதி தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமின் மூலம் 24 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதார் எண்ணுகள் வழங்கப்பட்டன. இது, அவர்களது அடையாள நிலையை உறுதி செய்யும் முக்கிய படியாகும். மேலும், அரசு வழங்கும் பல்வேறு சமூக நலத்திட்டங்களை இந்தக் குழந்தைகள் எதிர்காலத்தில் பயனடையும்படியாக வழிவகுக்கும்.
இந்த முகாமில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீதரன், இணை இயக்குநர் (மருத்துவம்) மரு. சாந்தி, தனி வட்டாட்சியர் திரு. ராஜராஜன், மாவட்ட கல்வி அலுவலர், குழந்தைகள் நலத்துறை மற்றும் பிற அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதுபோன்று பல்முக உதவிகளுடன் கூடிய முகாம்கள் அதிக அளவில் நடைபெற வேண்டுமென பொதுமக்கள் கேட்டுள்ளனர்.