Type Here to Get Search Results !

ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.


ஒகேனக்கல், ஆடவை (ஆனி) 06-

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகளை ஆற்றுப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


கபினி அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் காரணமாக, ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்குதல், அருவிகளில் குளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக தடை செய்துள்ளது.


இந்த தடை நடவடிக்கையின் பின்னணியில், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை நிர்வாகம் கணக்கீடு செய்துள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாகவே இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதன் காரணமாக, அருவி மற்றும் ஆற்றுப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் வியாபாரம் செய்த வியாபாரிகள், ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய நடைபாதை நுழைவாயில்கள் மற்றும் தொங்கும் பால நுழைவாயில்களுக்கு பூட்டு வைக்கப்பட்டு, நுழைவு தடை செய்யப்பட்டது. இதனால் இன்று காலை வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies