பாலக்கோடு, ஜூன் 9:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஅள்ளி கிராமத்தில் வீரபத்திரசுவாமி கோயில் திருவிழா பக்தி மற்றும் பகிரங்கத்தோடு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா குருமன்ஸ் இன மக்கள் மத்தியில் முக்கியமான ஆண்டு விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பகுதியில் இவ்விழா நடைபெறும். இந்த ஆண்டு விழா ஜூன் 5ம் தேதி கொடியேற்றத்துடன் எர்ரனஅள்ளி வீரபத்திரசுவாமி கோயிலில் தொடங்கியது.
பாலக்கோடு, பெல்ரம்பட்டி, பெலமாரனஅள்ளி, நல்லம்பள்ளி, பென்னாகரம், மொரப்பூர், பாப்பிரெட்டிபட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வீரபத்திர சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கப்பட்டது. பின்னர், சாமியை அலங்கரித்து வீதியுலா எடுத்து செல்லப்பட்டது.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு மாலை அணிவித்து பூர்ணகும்ப மரியாதை கோயில் விழா குழுவினரால் அளிக்கப்பட்டது. மேலும், விழாவில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில், முன்னாள் செயலாளர் ரங்கநாதன், மாவட்ட அவைத் தலைவர் நாகராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர் சித்தராஜ் தலைமையில் கோயில் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.