பாலக்கோடு, ஜூன் 9:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள மேக்கலாம்பட்டி கிராமத்தில், வேடியப்பன், முத்துவேடியம்மன், போத்தராஜ் ஆகிய கோயில்களின் ஆண்டு திருவிழா சிறப்பு பக்தி நிலைவுடன் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இத்திருவிழா கடந்த நாள் கங்கை பூஜை மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்வுகளுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று, மூவரும் சுவாமிகளுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது.
பக்தர்கள் பெருமளவில் மாவிளக்கு, தீச்சட்டி எடுத்தல், கிடா வெட்டி பொங்கல் வைக்கும் வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். திருவிழாவை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததுடன், அனைவருக்கும் அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை மந்திரி கவுண்டர் முனியப்பன், ஊர் கவுண்டர் ராஜமாணிக்கம், கோல்காரர் வேடி, முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துவேல், நிர்வாகி போத்தன், மற்றும் கோயில் விழா குழு, மேக்கலாம்பட்டி, கடமடை பங்காளி வீட்டார் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.