ஒகேனக்கல், ஆடவை (ஆனி) 15-
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதையடுத்து, தருமபுரி மாவட்டத்தின் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து பெரிதும் அதிகரித்து வெள்ளப்பெருக்கு நிலவுகிறது. இந்நிலையில், இன்று காலை மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பியின் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் நீரில் அடித்து வரப்பட்ட நிலையில் தேங்கி கிடப்பதை மீன்பிடி தொழிலாளர்கள் பார்த்தனர்.
அவர்கள் உடனடியாக ஒகேனக்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் முரளி மற்றும் போலீசார் அந்த சடலத்தை மீட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சடலத்தின் அடையாளம் மற்றும் மரணத்தின் காரணம் குறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் யாரேனும் இவரின் அடையாளத்தை அறிந்திருந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் வழங்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.