அரூர், ஆடவை (ஆனி) 16-
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளி வளாகத்தில் ஆடு, மாடு, நாய்கள் போன்ற மிருகங்கள் சுதந்திரமாக நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் மது அருந்துவோர் பள்ளி வளாகத்தில் வந்து, பள்ளி வளத்தையே குடிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். மதுபாட்டில்கள் மற்றும் கழிவுகளை விட்டு செல்லும் இச்செயலால், மாணவர்கள் மறுநாள் பள்ளிக்கு வரும்போது பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். பள்ளி வளாகத்தில் சுத்தம், பாதுகாப்பு இல்லாததால் மாணவர்கள் பயத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.
இதனை உருக்கமாக கூறும் அந்த பகுதி பொதுமக்கள், “பள்ளிக்கு முழுமையான சுற்றுச் சுவர் கட்டப்பட்டால் இவ்வாறான சிக்கல்கள் அனைத்தும் குறையும். மாணவர்களின் கல்வி, பாதுகாப்பு, மனநிலை ஆகியவை மேம்படும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, போர்க்கள அடிப்படையில் சுற்றுச் சுவர் கட்டும் பணி தொடங்க வேண்டும்” என வலியுறுத்துகின்றனர்.