தருமபுரி, ஜூன் 2:
2025–26 கல்வியாண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு புதிய பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி நகராட்சிக்குட்பட்ட அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்டத்திற்கான கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. மாணவ, மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் திரு. வெங்கடேஷ்வரன், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஜோதிசந்திரா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. அன்பழகன், வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆர். காயத்ரி, மற்றும் பல அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்து, அனைவரும் கல்வியறிவில் முன்னேற வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கமாகும் என்றும், இத்திட்டம் மாணவர்களுக்கு மிகப் பெரும் ஆதரவாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்.