தருமபுரி, ஆடவை (ஆனி) 16-
தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களும் குழுக்களும் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள், வணிக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தகுதிகள்:
-
விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
-
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்தை மீறக்கூடாது.
-
வயது 18-60க்குள் இருக்க வேண்டும்.
-
ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
தனிநபர் கடன் திட்டம்:
-
சிறு வர்த்தகம், விவசாயம், மரபு தொழில்கள் உள்ளிட்டவை மேற்கொள்வதற்காக அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
-
ரூ.1.25 லட்சம் வரை 7% வட்டி, ரூ.1.25 லட்சத்திற்கு மேல் ரூ.15 லட்சம் வரை 8% வட்டி விதிக்கப்படும்.
-
கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை.
குழுக் கடன் திட்டம்:
-
சுய உதவி குழுவினருக்கான இந்த திட்டத்தில், ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் மற்றும் ஒரு குழுவுக்கு ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும்.
-
7% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
-
குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாக இருக்க வேண்டும்.
-
திட்ட அலுவலரால் தரம் மதிப்பீடு (grading) செய்யப்பட்டிருக்க வேண்டும்.
-
குழுவில் 20 உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்படுவர்.
கறவை மாடுகள் வாங்குவதற்கான உதவி:
-
பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஒரு மாட்டிற்கு ரூ.60,000 வீதம் 2 மாடுகள் வரை, மொத்தமாக ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
-
வட்டி விகிதம் 7%, 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
-
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பங்களை பெறலாம்.
-
www.tabcedco.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
-
விண்ணப்பத்துடன் சாதி, வருமானம், பிறப்பிட சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார், வங்கி ஆவணங்கள் இணைக்க வேண்டும்.
இந்த வாய்ப்பினை தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் மற்றும் குழுக்கள் பயன்படுத்தி பயனடைய மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.