தருமபுரி, ஆடவை (ஆனி) 16-
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (30.06.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 588 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பட்டா கோரிக்கை, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுந்த தீர்வுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், இக்கூட்டத்தின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில் கிறித்துவ பணியாளர்கள் மற்றும் உபதேசிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
அதேபோல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.1.83 இலட்சம் மதிப்பிலான நவீன செயற்கை காலின் உதவியுடன் மாற்றுத் திறனாளிக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு. சையது முகைதீன் இப்ராகிம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் திருமதி செண்பகவள்ளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.