தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டு வட்டம், சீரியனஅள்ளி அஞ்சல், ஈச்சம்பள்ளம், அத்திமரத்துப்பள்ளம், சக்கில்நத்தம் கிராமங்களில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பொதுமக்கள், கடந்த 60 ஆண்டுகளாக தங்களது சொந்த செலவில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். மேலும் விவசாயம் செய்து தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் கூறுகையில்: “நாங்கள் பல முறை வீட்டுமனை பட்டா கோரி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தோம். மக்கள் முதல்வர் முகாமிலும் மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த தகவலும் இல்லாமல், எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பதைப் போல் தெரிகிறது.
அதனால், அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மேலும் வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எங்களது அனைத்து வாக்குகளையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், எங்கள் வாழ்வதற்கான நிலையை புரிந்து கொண்டு, காலதாமதம் செய்யாமல் உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
.gif)

