அரூர், ஆடவை (ஆனி) 10-
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நொண்டி முனியப்பன் திருக்கோவிலில் 3ஆம் ஆண்டு மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. முதல் நாள் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், கோவில் பூசாரி பக்தர்களுக்கு காப்பு, கங்கனம் கட்டி ஆசீர்வதித்தார். இரண்டாம் நாளில் வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், அஷ்டதிக்பாலகர் ஹோமம் உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
மூன்றாம் நாளான இன்று, விருட்சிக லக்கனத்தில் 20 அடி உயரமுள்ள நொண்டி முனியப்பன் சுவாமிக்கு மஹா கலசாபிஷேகம், தீர்த்தவாரி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், பல பக்தர்கள் பங்கேற்று ஆன்மிக உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து உருள்வழிபாடுடன் தவமிருந்தனர். விழாவில், முனுசாமி, திருப்பதி பூசாரி ராமு, வெங்கிடு பழனிசாமி, ஆறுமுகம், சங்கர், திருசிங், சௌந்திரபாண்டியன், முத்துசாமி உள்ளிட்டோர் முக்கிய பங்கு வகித்தனர். விழா முடிவில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.