தருமபுரி, ஆடவை (ஆனி) 08-
தருமபுரி மாவட்ட மை பாரத் மற்றும் கலைத்தாய் சிலம்பம் இளைஞர் நற்பணி சங்கம் இணைந்து, 2025 ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான யோகா விழாவை தருமபுரி மாவட்டம், பாரதிபுரத்தில் உள்ள கலைத்தாய் கலைக்கலத்தில் சிறப்பாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி வட்டாட்சியர் திரு. சண்முகசுந்தரம் அவர்கள் தலைமை வகித்தார். யோகா மற்றும் மனவளக் கலை பயிற்றுநர்கள் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தனிகைவேல் மற்றும் ஜேயம் யோகா அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஜெயப்பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் யோகாவின் அவசியம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் குறித்து விளக்கியும், நேரடியாக யோகா பயிற்சி வழங்கியும் சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஆரம்பத்தில், சர்வதேச யோகா தினத்திற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பல்வேறு யோகாசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இதில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி இறுதியில், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவின் சிறப்பான ஏற்பாடுகளை கலைத்தாய் சிலம்பம் பயிற்சி பள்ளி இயக்குநர் மணிகண்டன், இளைஞர் நற்பணி சங்கத் தலைவர் விக்னேஷ்வரி, செயலாளர் தீபக், மை பாரத் தருமபுரியின் தேசிய இளைஞர் தொண்டர் பசுபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியின் நிறைவு பரிசில், பல்நோக்கு பணியாளர் திரு. ரா.முனியப்பன் நன்றி உரையுடன் விழா நிறைவுபெற்றது.