![]() |
File Image. |
தருமபுரி, ஜூன் 08 –
தருமபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் பல்வேறு அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும், பள்ளி மற்றும் கல்லூரி சொந்த பேருந்துகளிலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஆபாசம் மற்றும் பாலியல் உணர்வை தூண்டும் இரட்டை அர்த்த பாடல்கள் மிகப்பெரிய சத்தத்தில் ஒலிக்கப்படுவது குறித்து பொதுமக்கள் ஆத்திரம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வகை பாடல்கள், பெண்கள் தங்களது தந்தையோ, சகோதரனோடு பயணிக்க முடியாத நிலையை உருவாக்குகிறது. இதேபோன்று ஆண்கள் தங்கள் தாயோ சகோதரியோடு பயணிக்கும்போது வெட்கமும் தவிப்பும் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், மாணவர்கள் பயணிக்கும் கல்வி நிறுவன பேருந்துகளிலும் மாணவர்களுக்கே பொருத்தமற்ற பாடல்கள் ஒலிக்கப்படுவது மாணவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடியதாகவும், சமூக ஒழுங்குக்கே கேடு விளைவிக்கக்கூடியதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவியர் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். “பொது இடங்களில் ஒலிக்கும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு பெண்ணின் மரியாதையை பிரதிபலிக்க வேண்டும்” என்றே அவர்கள் கூறுகின்றனர்.