தருமபுரி, மே 21-
தருமபுரி மாவட்டத்தில் இன்று (21.05.2025) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு (2024–2026) தலைவர் மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். காந்திராஜன் தலைமையில், பல்வேறு வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதலில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட அளவிலான திட்டங்கள் குறித்து விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை குழுவினர் நேரில் பார்வையிட்டனர். நார்த்தம்பட்டியில் வனத்துறை சார்பில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட மரகத பூங்காவில் மரநடுகை நடைபெற்றது. அதியமான்கோட்டையில் ரூ.1.79 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதிகள், தருமபுரி சிறைச்சாலை, மதிகோண்பாளையம் சனத்குமார் நதி பகுதிகள், சோகத்தூர் மற்றும் பாப்பாரப்பட்டி வரை பூர்த்தியாக்கப்பட உள்ள சாலைகள் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிர்கள், இரகங்கள் மற்றும் விவசாயிகளுக்கான அரசு உதவிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் 17 விவசாயிகளுக்கு ரூ.8.82 இலட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை சார்பாக மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ.8.55 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தின் இறுதியில் மொத்தமாக ரூ.72.45 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டன.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்கள், பெண்கள் முன்னேற்றம் சார்ந்த திட்டங்கள், விவசாயத் துறைக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுகின்றன என்பதை மதிப்பீட்டுக் குழு பாராட்டியது. பொதுமக்களின் வரிப்பணத்தின் மூலமே இத்தகைய திட்டங்கள் செயல்படுகின்றன என்பதால், அவை சரியான முறையில் செலவிடப்படுகின்றனவா என்பதைத் தொடர்ந்தும் குழு கவனித்து வருவதாகவும், அலுவலர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் திரு. எஸ். காந்திராஜன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக