தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பி. கொல்லஹள்ளி ஊராட்சியில் உள்ள சோமனஹள்ளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மினி சின்டெக்ஸ் டேங்க், கடந்த ஆறு மாதங்களாக தண்ணீரின்றி வீண் காட்சி பொருளாக மாறியுள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அக்குமாரியம்மன் திருக்கோவிலில், சில நாட்களில் சித்திரை திருவிழா நடைபெறவுள்ளது. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், பண்ணை சாலையோரம் அமைந்துள்ள குடிநீர் வசதிக்கான சின்டெக்ஸ் டேங்க் பயன்பாட்டிற்கு வராதது பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே கடும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் இல்லாத நிலைமை தொடர்ந்து காணப்படுவதால், பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாக நேரிடலாம் எனவும், உடனடியாக சின்டெக்ஸ் டேங்குக்கு தண்ணீர் இணைப்பு வழங்கி, பயன்படுத்தக்கூடிய நிலைக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.