பயிற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் மாவட்டத்தில் உள்ள பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளை நேரில் சந்தித்து, தொழில்நுட்பங்களை செயல்முறையாக கற்றுக்கொள்கின்றனர். மேலும், பட்டு வளர்ச்சித் துறை அலுவலகங்களில் நடைபெறும் செயற்பாடுகளில் பங்கேற்று அனுபவம் பெற்றும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs), அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) மூலம் செயல்படுகின்ற விவசாய அபிவிருத்தித் திட்டங்களை அறிந்தும் வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, காவேரிப்பட்டிணம் அருகேயுள்ள எர்ரஅள்ளி கிராமத்தில் இயங்கும் காவேரிப்பட்டிணம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில், கும்மனூர் கிராமத்தில் நடைபெற்ற தோட்ட வடிவமைப்பு களப்பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சியில் இடுபொருள் தயாரித்தல், இருமடி பாத்தி மற்றும் மேட்டு பாத்தி அமைத்தல், தினசரி உணவுக்குத் தேவையான காய்கள் மற்றும் கீரைகள் பயிரிடும் முறைகள் ஆகியவற்றை செயல் வழியில் கற்றனர்.
மேலும், குறித்த உழவர் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் மற்றும் விற்கப்படும் முக்கியமான வேளாண் மற்றும் மதிப்புக் கூட்டு பொருட்களைப் பற்றி விரிவாக அறிந்தனர். இதில் மிளகு, கருப்பு உளுந்து, சிவப்பு மூக்கடலை, சாமை, தினை, கருங்குறுவை அரிசி, இயற்கை பற்பசை, சத்து மாவு, மூலிகை வழலைக்கட்டி, பன்னீர் ரோஜா வழலைக்கட்டி போன்ற பல பொருட்கள் அடங்கும்.
இந்த அனுபவம் மாணவர்களுக்கு மேம்பட்ட அறிவு மற்றும் தள அனுபவத்தை வழங்கியது. இது எதிர்காலத்தில் வேளாண் மற்றும் பட்டுப்புழு வளர்ச்சித் துறையில் புதிய முனைப்புடன் சேவையாற்றும் இளம் விஞ்ஞானிகளை உருவாக்க உதவும்.