தருமபுரி, மே 23-
தருமபுரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பருவமழை காரணமாக வெள்ளம், இடி மின்னல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், அவற்றின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட அளவில் பேரிடர் முகாமைத்துவ குழு அமைக்கப்பட்டு, வட்டங்களின் கீழ் துணை ஆட்சியர் மற்றும் தொகுதி அலுவலர்கள் தலைமையில் நிலவர கண்காணிப்பு மற்றும் துரித நடவடிக்கை குழுக்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தேடுதல் மற்றும் மீட்பு பணிக்குழு, பொதுமக்கள் தங்கும் இட வசதி ஏற்பாடு, சுகாதாரக் குழு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு மேலாண்மை குழு உள்ளிட்ட பல்வேறு அணிகள் இயங்குகின்றன.
இந்த சூழலில், அவசர நேரங்களில் பொதுமக்கள் உதவிக்காக மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டு அறையை 24 மணி நேரமும் செயல்படுத்தி வருகிறது. இது சுழற்சி முறையில் பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. ஏதேனும் பேரிடர் அல்லது அவசர உதவிக்காக பொதுமக்கள் 1077, 04342-231500, 04342-230067, 04342-231077 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவல்களை வெளியிட்டு, மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், தேவையான உதவிகளுக்காக நிர்வாகத்துடன் தாராளமாக தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக