தருமபுரி, மே 23-
தருமபுரி மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டு பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை செய்த சமூக சேவகருக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் மாநில அரசின் சார்பில் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் இந்திய சுதந்திர தின விழாவில் வழங்கப்படும். இதற்காக சிறந்த சேவையை செய்த நபர்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிறந்த சமூக சேவகருக்கு 50,000 ரூபாய் ரொக்கப் பரிசும், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் சான்றிதழுடன் வழங்கப்படும்.
விருதுக்கான தகுதிகளில், விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்கள் நலத்திற்காக தொடர் சேவையில் ஈடுபட்டு, சமூகத்தின் மேன்மைக்கு பங்களித்து வந்திருக்க வேண்டும். மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் சேவை செய்திருக்க வேண்டும். தொண்டு நிறுவனங்கள் அரசின் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க https://award.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 12, 2025. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து ஆதார ஆவணங்களையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரித்த புத்தகமாக இரண்டு நகல்களில், தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் கட்டடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக