தருமபுரி, மே 07:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (07.05.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் தொழிலாளர் நலவாரியங்களின் சமூக பாதுகாப்பு திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தலைவர் திரு. பொன்குமார் அவர்கள் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, மொத்தம் 40 நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.12.28 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் ரூ.5.50 இலட்சம் இயற்கை மரண உதவித்தொகை, ரூ.2.50 இலட்சம் மருத்துவக் கல்வி உதவி, ரூ.28,000 பட்டப்படிப்பு கல்வி உதவி மற்றும் ரூ.4.00 இலட்சம் திருமண உதவித்தொகை ஆகியவை அடங்கும்.
பின்னர் உரையாற்றிய திரு. பொன்குமார் கூறுகையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தலைமையில் தொழிலாளர் நலவாரியங்கள் வழியாக சமூக பாதுகாப்பு உறுதி செய்யும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுவரை 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினராகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 20 நலவாரியங்கள் மூலம் கல்வி, திருமணம், மருத்துவம், மரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன,” என தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 2.88 இலட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 6.34 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.407.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், வீடில்லாத தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நிதியுதவியுடன் சேர்த்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான மானியம், IIT, IIM, மருத்துவக் கல்விக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு புதிய நலத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக