தருமபுரியில் மா மகத்துவ மைய பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 மே, 2025

தருமபுரியில் மா மகத்துவ மைய பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.


கம்பைநல்லூர், மே 17:

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டாரத்தில் உள்ள வேதம்பட்டி கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் 10.12 எக்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் மா மகத்துவ மைய பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.


இந்த மையத்தில் முதற்கட்டமாக பெங்களூரா, அல்போன்சா, பங்கன பள்ளி மற்றும் இமாம்பசந்த் போன்ற ரகங்களின் செயல்விளக்க திடல்களில் மாங்கன்றுகளை ஆட்சித்தலைவர் நடவு செய்து நடவுப்பணியை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் அவர் உரையாற்றும்போது, தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், விவசாய பெருங்குடி மக்களுக்கு தேவையான திட்டங்களை தரமாக வழங்கும் வகையில் தமிழக முதலமைச்சர் பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக குறிப்பிட்டார். அதன்படி, சட்டமன்ற விதி 110ன் கீழ் தருமபுரியில் மா மகத்துவ மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


தொடர்ந்து, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் 2022–2023 திட்டத்தின் கீழ் இந்த மையம் அமைக்கப்படுகிறது. இதில், உயர்தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மா சாகுபடியில் உற்பத்தி திறனை உயர்த்துவது, தரமான நடவு பொருட்களை விவசாயிகளுக்கு வழங்குவது மற்றும் மா சாகுபடி குறித்த பயிற்சிகளை வழங்குவது ஆகியவை முக்கிய நோக்கங்களாக உள்ளன.


வேதம்பட்டி பகுதியில் 10.12 எக்டர் பரப்பளவில் இந்த மையத்திற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் மாதிரி செயல்விளக்க திடல்கள், மா தாய்செடி மற்றும் மரபு வகை வயல்கள், நாற்றங்கால் உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.


மா வளர்ப்பு முறைகள், சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பூட்டல் செயல்முறைகள் குறித்த விழிப்புணர்வை வழங்கும் இம்மையம் விரைவில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் செயல்பட தொடங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்த நேரில் ஆய்வில் தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி பாத்திமா, மொரப்பூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் திரு. ராஜேஷ் கண்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad