தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (12.05.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 467 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலிருந்தார்.
இக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள், பட்டா மற்றும் சிட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டு மனை, வேலைவாய்ப்பு உதவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மனுக்கள் குறித்து பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள்,
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் மனுக்களை விரைந்து தீர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளின் கீழ் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்,” என கூறினார்.
இக்கூட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், அண்மையில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்த மூன்று பெண் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், அவர்களுக்குப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், உடை, மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஜோதிசந்திரா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சுப்பிரமணி, மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக