பாலக்கோடு, மே 14 –
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள தொட்டபவாளி கிராமத்தில் நில உரிமை தொடர்பான தகராறில், இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பேருக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொட்டபவாளியை சேர்ந்த மாலினி (48) என்பவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கணவர் ராஜேந்திரனை இழந்ததையடுத்து, பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் உள்ள தாய் வீட்டில் தங்கி வசித்து வந்தார். இவரது கணவருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில், நேற்று கூலி தொழிலாளர்களுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அமானிமல்லாபுரத்தைச் சேர்ந்த நந்தினிபிரியா (35), சசிகலா (40), மற்றும் பிரதீப்குமார் (45) ஆகியோர் அங்கு வந்து நில உரிமையைச் சுற்றி மாலினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு உச்சத்தில் சென்ற நிலையில், மூவரும் தென்னை மட்டையால் மாலினியையும், அவளுடன் பணியாற்றி வந்த கூலி தொழிலாளி பூங்கொடியையும் கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த இருவரும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாலினியின் புகாரின் பேரில், மாரண்டஅள்ளி போலீசார் நந்தினிபிரியா, சசிகலா மற்றும் பிரதீப்குமார் ஆகிய மூவர்மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.