பாலக்கோடு, மே 14 –
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள வீரசெட்டிஅள்ளி கிராமத்தில், விவசாயக் கிணற்றில் மர்ம நபர்கள் விஷம் கலந்து விட்டதால் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த வெண்ணிலா (வயது 40) என்பவர் விவசாயம் செய்வதோடு, ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றார். இவருக்கு சொந்தமான விவசாயக் கிணறு அந்த பகுதியில் உள்ளது.
இன்று காலை வெண்ணிலா, கால்நடைகளுக்கு தண்ணீர் எடுத்தபோது, தண்ணீர் துர்நாற்றமுடன் வெள்ளை நுரையுடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. சந்தேகமடைந்த அவர் கிணற்றை எட்டி பார்த்தபோது, மீன்கள் செத்து மிதந்து கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் கூறியதற்கு, அவர்கள் கிணற்றில் விஷம் கலந்திருக்கலாம் எனக் கூறி எச்சரித்துள்ளனர். உடனடியாக வெண்ணிலா, இண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, விஷம் கலந்த மர்ம நபர்களை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
குடிநீர் மற்றும் கால்நடைகள் பயன்பாட்டிற்காகவே பயன்படுத்தப்படும் இந்தக் கிணற்றில் விஷம் கலக்கப்பட்டிருப்பது அந்த பகுதி மக்களில் பெரும் பதட்டத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.