தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள சோமனஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ அக்குமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, எருது விடும் விழா நேற்று மாலை விமர்சையாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் விசேஷ வடிவில் நடைபெறும் இந்த திருவிழா, கடந்த புதன்கிழமை தொடங்கி இன்று நிறைவடைந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நடத்தப்படும் எருது விடும் விழாவில், 12 கிராமங்களைச் சேர்ந்த காளைகள் கலந்துக்கொண்டது சிறப்பம்சமாக அமைந்தது.
பி.கொல்லஅள்ளி, சின்னகொல்லஅள்ளி, பொடுத்தம்பட்டி, கம்மநாயக்கன்பட்டி, சவுளூர், குட்டம்பட்டி, அழகம்பட்டி, முருக்கம்பட்டி, கோடியூர், பெரியபாப்பிநாயக்கனஅள்ளி, சின்னபாப்பிநாயக்கனஅள்ளி, கோயிலூரான் கொட்டாய், கசியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன.
கிராம மக்கள் பாரம்பரிய முறையில் மேள தாளங்களுடன் கோ பூஜை செய்து, புனித நீரை காளைகளின் மேல் தெளித்து விழாவை தொடக்கினர். பின்னர், ஊர் கவுண்டரின் தலைமைத்தில் முதல் காளை விடப்பட்டது. அதன் பின்னர், அலங்கரிக்கப்பட்ட காளைகள் கோவிலைச் சுற்றி வலம் வந்தன.
விழாவின் முக்கியக் கூறாக, சீறி பாயும் காளைகளை அடக்க பல இளைஞர்கள் சாகசமாக விரைந்து ஒட்ட முயன்றனர். இந்த தைரிய விளையாட்டைப் பார்வையிட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடும்பங்களுடன் வந்து கலந்துகொண்டனர்.
விழாவை முன்னிட்டு பாலக்கோடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பான அமைதியை உறுதி செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக