பழங்குடியினர், ஆதிதிராவிடர் பயனாளிகள் உள்ளிட்ட 1,004 நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 மே, 2025

பழங்குடியினர், ஆதிதிராவிடர் பயனாளிகள் உள்ளிட்ட 1,004 நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டப்பட்டி, NSK மஹாலில் பல்வேறு துறைகளின் சார்பில் பழங்குடியினர், ஆதிதிராவிடர் பயனாளிகள் உள்ளிட்ட 1,004 நபர்களுக்கு ரூ.10.81 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (06.05.2025) வழங்கினார்கள்.


இந்த நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தலைமையேற்கப்பட்டார். மேலும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி அவர்கள் முன்னிலை வகித்தார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, அரூர் வட்டம், கோட்டப்பட்டி, NSK மஹாலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் அரூர் வட்டத்திற்குட்பட்ட 274 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் நத்தம் வீட்டு மனைப்பட்டாக்கள், இ-பட்டாக்கள், மின்னணு குடும்ப அட்டைகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண, விபத்து மரண உதவித்தொகைகளையும், 10 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழ்களையும் வழங்கப்பட்டது.


மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.70.99 இலட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன் உதவிகளும் வழங்கப்பட்டது.


தோட்டக்கலைத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.20.42 இலட்சம் மதிப்பீட்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம், RKVY, SAMA திட்டத்தின் கீழ் விசை தெளிப்பான்கள், சொட்டு நீர் பாசன உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணயைம் திட்டத்தின் கீழ் கறவைமாடு, தேனீப்பெட்டி, மண்புழு வளர்க்கும் சில்பாலீன் பை, பழக்கன்றுகள், வேளாண்மை இயந்திரமாக்கல் உப இயக்கம் திட்டத்தின் கீழ் களையெடுக்கும் கருவிகள், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் வேளாண்மை உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.


சமூக நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3.27 இலட்சம் மதிப்பீட்டில் திருமண நிதி உதவி, தங்க காசுகளும், பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 126 பயனாளிகளுக்கு பழங்குடியின நலவாரிய அட்டைகள், இலவச செம்மறி ஆடுகள் மற்றும் கறவை மாடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ.1.88 இலட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகை, உயர்கல்வி உதவித்தொகை, பணியிடத்து விபத்து மரண உதவித்தொகைகளும் வழங்கப்பட்டுள்ளன. 3 பயனாளிகளுக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் உறுப்பினர் பதிவு அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.


மருத்துவத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் காப்பீடு அட்டைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.28.47 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.


தொழில் வணிகத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தொழில் கடன் உதவித்தொகைகளும், மகளிர் திட்டம் சார்பில் 200 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி, தொழில் முனைவோர் நிதி, வாழ்வாதார நிதி, அமுதசுரபி, வளர்ச்சி நிதி, கடன் இணைப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.


அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் உரை: 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்துச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள்.


தருமபுரி மாவட்டத்தில் நேற்றைய தினம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நாராயணசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 1,166 பயனாளிகளுக்கு ரூ.23.19 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அரூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய கட்டடம் ரூ.6.45 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணி, பருவதனஅள்ளி கிராமத்தில் ”முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்” கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. மேலும், வழித்தட நீட்டிப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்களுக்கான பேருந்து சேவை தொடங்கப்பட்டு, 4 புதிய பகுதி நேர நியாயவிலைக் கடைகள் திறந்து வைக்கப்பட்டது.


இன்றைய தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சின்னாற்றின் குறுக்கே அமைந்துள்ள பஞ்சப்பள்ளி மற்றும் இராஜபாளையம் அணைக்கட்டுகள் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அரூரில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் பழங்குடியினர், ஆதிதிராவிடர் பயனாளிகள் உள்ளிட்ட 1,004 நபர்களுக்கு ரூ.10.81 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், விடியல் பயணம் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம், முதல்வர் மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு முத்தான திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் முகாம் நமது தருமபுரி மாவட்டத்தில் தொப்பூர் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டு, தற்பொழுது தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற மகளிர் பயனடைந்து வருகின்றனர்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ்நாடு மக்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்கும் எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி அதனை முழுமையாக நிறைவேற்றி வருகிறது. மேலும், பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தகுதியான நபர்களுக்கு கிடைக்கும் வகையில் தருமபுரி மாவட்ட அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். 


இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள். 


இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி. கேத்தரின் சரண்யா, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ஆர். கவிதா, முன்னாள் அமைச்சர் முனைவர். பி. பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தடங்கம். பெ. சுப்பிரமணி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. சின்னுசாமி, பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் திரு. குணசேகரன், கைம்பெண் நல வாரிய உறுப்பினர் திருமதி. ரேணுகா தேவி, அரூர் பேரூராட்சி தலைவர் திருமதி. இந்திராணி தனபால், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad