தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மொரப்பூர் - தருமபுரி புதிய அகல இரயில்பாதை திட்டத்தின் செயல்பாடுகள் வேகமடைவதற்காக, தேவையான நிலங்களை அரசு வழியே எடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மணியம்பாடி கிராமத்தில் இரயில்பாதை அமைக்க நிர்ணயிக்கப்பட்ட 6.51.52 ஹெக்டேர் நிலங்களை வாங்கியமைக்க, நில உரிமையாளர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை கூட்டம் இன்று (02.05.2025) நடைபெற்றது.
இக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்களின் தலைமையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தின் போது, நில உரிமையாளர்களிடம் நிலத்தின் மதிப்பு, இழப்பீட்டுத் தொகை, அரசு விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. நில உரிமையாளர்களும் தங்களது நிலங்களை அரசு திட்டத்திற்காக ஒப்படைக்க தயாராக இருப்பதைக் தெரிவித்தும், சட்டபூர்வமான வாக்குமூலம் வழங்கியும் நிலமையைக் உறுதிப்படுத்தினர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆர். கவிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. சின்னுசாமி, தென்னக இரயில்வே சேலம் முதுநிலை பிரிவு பொறியாளர் (கட்டுமானம்) திரு. எத்திராஜ், சார்பதிவாளர் திரு. அறிவழகன், இரயில்பாதை நிலஎடுப்பு தனி வட்டாட்சியர் திருமதி. கலைச்செல்வி, உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டம் மூலம் தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக