
தருமபுரி, மே 21-
தருமபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழுவின் (2024-2026) தலைவரும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. எஸ். காந்திராஜன் தலைமையில், குழு உறுப்பினர்கள் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டு பணிகளை மே 21ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திட்டப்பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தா. உதயசூரியன், டாக்டர். சதன் திருமலைக்குமார், எஸ். சுதர்சனம், சேவூர். இராமச்சந்திரன், எஸ். எஸ். பாலாஜி, எஸ். பி. வெங்கடேஷ்வரன் மற்றும் பிற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மரகதப்பூங்கா, காலபைரவர் கோவிலின் விடுதி கட்டுமானம், மதிகோண்பாளையம் சனத்குமார் நதி, மாவட்ட சிறைச்சாலை ஆகிய இடங்களில் நேரில் பார்வையிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சிறையிலுள்ள வசதிகள், உணவின் தரம், குடிநீர், காற்றோட்டம் உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.49.50 கோடி மதிப்பில் தருமபுரி–பாப்பாரப்பட்டி இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. வேலைகள் விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது. பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்திலும் ஆய்வு நடைபெற்றது. இதில், ராகி விதை, சிறுதானிய விதைகள், சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட உதவிகளை ரூ.8.82 லட்சம் மதிப்பில் 17 விவசாயிகளுக்கு வழங்கினார்.
மேலும், 25 பயனாளிகளுக்கு ரூ.17.37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 8 பயனாளிகளுக்கு ரூ.8.55 லட்சம் மதிப்பில் வீட்டு மனை பட்டா, சமூக முதலீட்டு நிதி, இயற்கை மரணத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்வுகளில், சட்டமன்ற பேரவை முதன்மை செயலாளர் முனைவர் கி. சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி கே. சரண்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். எஸ். மகேஸ்வரன், வன அலுவலர் ராஜாங்கம், வருவாய் அலுவலர் ஆர். கவிதா மற்றும் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதிப்பீட்டுக்குழு தலைவர் திரு. எஸ். காந்திராஜன் உரையில், “மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் செலவுகள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை மதிப்பீட்டுக்குழு ஆய்வு செய்கிறது. திட்டங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்” எனக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக