பாலக்கோடு, மே 23-
தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு தாலுக்காவில் 1434-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த மே 20ஆம் தேதி தொடங்கி, நான்கு நாட்கள் நடைபெற்று, நேற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது. பாலக்கோடு, புலிக்கரை, மாரண்டஅள்ளி மற்றும் வெள்ளிசந்தை ஆகிய நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து சமூக பாதுகாப்பு திட்டங்கள், வட்ட வழங்கல், பட்டா மாற்றம், நில அளவை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தமாக 490 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் விரிவாக ஆய்வு செய்யபட்டு, தகுதியான 45 மனுக்கள் தேர்வுசெய்யப்பட்டன. தேர்வான மனுக்களுக்கு உடனடி தீர்வாக அதிகாரப்பூர்வ ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, தாலுக்கா அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் உதவி கலெக்டர் திருமதி காயத்திரி அவர்கள் தகுதியான 45 பயனாளிகளுக்கு தீர்வுகள் தொடர்பான ஆணைகளை நேரில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ரஜினி, துணை தாசில்தார் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர்கள் கமலேஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயனாளிகள், தங்கள் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு வழங்கிய மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக