தருமபுரி, மே 23-
தருமபுரி மாவட்டத்தில் 1434-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த 20.05.2025 முதல் 23.05.2025 வரை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது. இதன் நிறைவு நாளான 23.05.2025 அன்று, அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு தீர்த்தமலை உள்வட்டத்திற்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்டம் முழுவதும் 7 வட்டங்களில் நடைபெற்ற இந்த வருவாய் தீர்வாயத்தில் மொத்தமாக 5,381 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் பாலக்கோடு வட்டத்தில் 490, காரிமங்கலம் 387, தருமபுரி 555, நல்லம்பள்ளி 548, பென்னாகரம் 973, அரூர் 1,548 மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 880 கோரிக்கை மனுக்கள் வரவடைந்தன. குறிப்பாக, தீர்த்தமலை உள்வட்டத்தில் மட்டும் 533 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று போன்றவையும் அடங்கும். மாவட்ட ஆட்சித்தலைவர், பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்களையும் விரைவாக ஆய்வு செய்து, தகுதியுடைய மனுக்களுக்குத் துரிதமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நில அளவை உதவி இயக்குநர் திரு. செந்தில்குமார், மாவட்ட மேலாளர் திரு. அருண் பிரசாந்த், அரூர் வட்டாட்சியர் திரு. பெருமாள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக