தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளிமண்டி அருகே செயல்பட்டு வந்த நவீன எரிவாயு தகன மேடை பழுதடைந்து நீண்ட நாட்களாக செயலிழந்து கிடந்தது. இதனால், பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் தகனத்திற்கு பெரும் சிரமங்களை பொதுமக்கள் எதிர்கொண்டனர்.
பொதுமக்கள் எதிர்பார்த்ததற்கேற்ப, பாலக்கோடு பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இந்த தகன மேடையை சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டன. தற்போது இந்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தன்னுடைய நேரடி பார்வையில் தகன மேடை பணிகளை ஆய்வு செய்தார்.
பணிகள் தாமதமின்றி முழுமை பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், பணியாளர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார். சீரமைப்பு பணிகள் விரைவில் முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி, துப்ரபுவு ஆய்வாளர் ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
— P. S.வேலூ - தமிழக குரல் செய்தியாளர், பாலக்கோடு

