பாப்பிரெட்டிப்பட்டியில் 30 கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு – பொதுமக்கள் சட்டப்போராட்டம் தொடங்க திட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 மே, 2025

பாப்பிரெட்டிப்பட்டியில் 30 கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு – பொதுமக்கள் சட்டப்போராட்டம் தொடங்க திட்டம்.


தர்மபுரி, மே 15:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பஸ்நிலையம் அருகிலுள்ள சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் தற்போது தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாம். இந்த நிலங்களில் அடுக்குமாடி வீடுகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் கட்டப்பட்டு, சட்டவிரோதமாக வாடகைக்கு விடப்பட்டு பல லட்சங்கள் வருவாயாக பெறப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இந்த நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மிகவும் வசதி பெற்றவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசுக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் வருவாய் இழப்பேற்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அரசு அலுவலகங்களுக்கே போதிய இடவசதி இல்லாத நிலையில், மக்கள் சொத்துகளாக அரசு நிலங்கள் பயன்படுத்தப்படுவதில் கடும் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டி பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.


பேரூராட்சி தலைவர் அவர்களும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு அரசு அதிகாரி, இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு சொத்தை தனிநபர்களிடம் தாரைவார்க்கும் அந்த அதிகாரியின் புகைப்படத்துடன் கூடிய புகைப்பட ஆதாரத்துடன் விரைவில் மேலதிக தகவல்கள் வெளிவரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.


இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், வருவாய்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். "இந்த நிலங்களை சட்டப்படி மீட்டெடுக்க சட்டப்போராட்டம் தொடங்கப்படும். நியாயமான கோரிக்கைக்கு மக்கள், சமூக ஆர்வலர்கள், நண்பர்கள் சார்பாக முழு ஆதரவும் கிடைக்கும்" என அவர்கள் உறுதியுடன் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad