தருமபுரியில் “நான் முதல்வன் – கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

தருமபுரியில் “நான் முதல்வன் – கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.


அதியமான்கோட்டை, மே 14:

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் “நான் முதல்வன் – கல்லூரிக் கனவு” திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (14.05.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது “நான் முதல்வன் – உயர்வுக்கு படி” எனும் உயர்கல்வி வழிகாட்டி கையேட்டையும் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.


இந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றிய போது கூறியதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் மற்றும் மாணவியர்களின் எதிர்காலத்தினை உயர்வாக கட்டமைக்க, தமிழ்நாடு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களில் முக்கியமானது “நான் முதல்வன் – கல்லூரிக் கனவு” திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தங்களது ஆர்வம் மற்றும் திறனுக்கு ஏற்ப துறை தேர்வு செய்து, எதிர்காலத்துக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை பெற வழிகாட்டப்படுகிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறிய “உறக்கத்தில் வருவது கனவல்ல; உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு” என்ற வார்த்தையை மேற்கோளாகக் குறிப்பிடும் அவர், மாணவர்கள் கனவுகளை மெய்ப்படுத்துவதற்காகத் தேவையான கல்விச் சூழலை அரசு உருவாக்கி தருவதாகவும் கூறினார்.


மாணவியருக்காக “புதுமைப்பெண்” திட்டமும், மாணவர்களுக்காக “தமிழ்புதல்வன்” திட்டமும் அமலில் உள்ளதையும், கல்வி முடித்த பின்னரும் திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொருளாதாரக் காரணங்களால் கல்வி இடைநிற்றலை சந்திக்க வேண்டிய நிலை உருவாகக்கூடாது என்பதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் இத்திட்டத்தைப் புரிந்து கொண்டு, தங்களது குழந்தைகள் தொடர்ச்சியாக உயர்கல்வி பயில வழிகாட்ட வேண்டும் என்றும், கல்வியை இடைநிறுத்தாமல், பட்டப்படிப்பை முடித்து வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஆட்சியர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி ஐ. ஜோதிசந்திரா, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் திருமதி சிந்தியா செல்வி, இணை இயக்குநர் (மருத்துவம்) மரு. சாந்தி மற்றும் பல அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad