தருமபுரியில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் கலந்தாய்வுக்கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

தருமபுரியில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் கலந்தாய்வுக்கூட்டம்.


தருமபுரி, மே 14:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையினருக்கான கலந்தாய்வுக்கூட்டம் இன்று (14.05.2025) மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண், சே.ச அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் திரு. எம்.எம். அப்துல் குத்தூஸ் (ஓ) இறையன்பன் குத்தூஸ், உறுப்பினர்கள் ஹேமில்டன் வில்சன், ஸ்வர்னராஜ், நாகூர் ஏ.எச். நஜிமுதீன், பிரவின்குமார் தாட்வியா, ராஜேந்திர பிரசாத், எம். ரமீட் கபூர், ஜே. முகம்மது ரபி, எஸ். வசந்த், துணை இயக்குநர் எஸ். ஷர்மிளி உள்ளிட்டோர் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது.


இதன்போது,

  • தருமபுரி மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் 38 பயனாளிகளுக்கு ₹7.60 இலட்சம்,

  • தருமபுரி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் 60 பேருக்கு ₹10.00 இலட்சம்,

  • உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தின் சார்பில் 10 பேருக்கு அடையாள அட்டைகள்,

  • கிறித்துவ பணியாளர் நல வாரியத்தின் சார்பில் 15 பேருக்கு அடையாள அட்டைகள்,

மொத்தம் ரூ.19.60 இலட்சம் (₹49,60,000/-) மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் 123 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.


இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண், சே.ச அவர்கள் கூறியதாவது:

“மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிறுபான்மையினரின் குறைகள், கோரிக்கைகளை நேரடியாக பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநிலம் முழுவதும் சிறுபான்மையினர் கலந்தாய்வுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது வரை 18 மாவட்டங்களில் இந்த நிகழ்வுகள் முடிந்து, தருமபுரி 19-வது மாவட்டமாகும். நவம்பர் மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் இந்த கூட்டங்களை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.”


இதுவரை பெறப்பட்ட 680 கோரிக்கைகளில் 532 மீது தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கோரிக்கைகள் மீதும் 15 நாட்களுக்குள் தீர்வு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


சிறுபான்மையினர் வாழ்வாதாரம், பாதுகாப்பு, உரிமைகள், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆணையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பங்கேற்ற பொதுமக்கள் பட்டா கோரிக்கை, கல்லறை தோட்ட வசதி, ஆலய வரிவிலக்கு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், ஆலயங்களுக்கு பாதுகாப்பு இல்லையென்ற கோரிக்கையைத் தொடர்ந்து உடனடியாக காவல் பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி கே. சரண்யா, இ.ஆ.ப., மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு. சையது முகைதீன் இப்ராகிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad