
தருமபுரி, மே 20-
இவ்வழியில் உள்ள மஞ்சவாடி கணவாய் முதல் சாமியாபுரம் கூட்ரோடு வரையிலான சாலையில் தற்பொழுது சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பெய்து வரும் மழையால், மஞ்சவாடி கணவாய் பகுதியில் சாலையின் இருபுறமும் மண் கொளட்டப்பட்டுள்ள நிலையில், ஒரு கனரக லாரி சேற்றில் சிக்கி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் பரபரப்பான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்தை சீரமைப்பதற்காக, பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இரவு 7.00 மணி முதல் அயோத்தியாப்பட்டிணம் வழியாக அரூர் செல்லும் வாகனங்களை மட்டும் அனுமதித்தது. மற்றவையாக அரூர் வழியாகச் சேலம் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் சாமியாபுரம் கூட்ரோடில் இருந்து பொம்மிடி – KN புதூர் – தீவட்டிப்பட்டி – ஓமலூர் வழியாக மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டன.
இதனால் தினசரி வேலைக்கு செல்லும் பயணிகள் மற்றும் வீடு திரும்பும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் எனவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறையை வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.