தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் 104 தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான 751 பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 72 பள்ளிகளின் 352 வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன. அதில் 11 வாகனங்களுக்கு பல்வேறு காரணங்களால் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும், சிறு குறைபாடுகளுடன் இருந்த 14 வாகனங்களுக்கு, குறைகளை ஒருவாரம் காலத்துக்குள் திருத்தி மீண்டும் ஆய்வுக்கு வர அறிவுறுத்தப்பட்டது.
அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்கள் விபரம்:
-
பராமரிப்பு குறைவாக இருந்த 2 வாகனங்களுக்கு ரூ.4,000 அபராதம்
-
உரிய உரிமம் இல்லாத ஓட்டுநருக்கு ரூ.5,000 அபராதம்
-
முதலுதவி பெட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 10 வாகனங்களுக்கு ரூ.100 வீதம் அபராதம்
மாநில அளவில் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கான மாவட்ட இடைதுறை குழுவின் வழிகாட்டுதலின்பேரில் இந்த முகாம் நடைபெற்றது. மாணவர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, அரசு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வது இதன் நோக்கம்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வின்போது தெரிவித்ததாவது,
“மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணையின் பேரில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி வாகனங்களில் இருக்கை வசதி, காப்பீடு, தீயணைப்பு கருவி, சிசிடிவி கேமரா, அவசரக் கதவுகள், ஜன்னல்கள், புத்தகப்பை வைக்கும் இடம் போன்றவை முறையாக உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது.”
மேலும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஓட்டுநர்களும், தன்னோடே பயணிக்கும் ஊழியர்களும் அவற்றின் செயல்பாடுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும், அவசர கால கதவுகள் மற்றும் தீத்தடுப்பு கருவிகள் குறித்த பயிற்சி தேவையானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநில அரசின் 2012-ஆம் ஆண்டு மோட்டார் வாகன சிறப்பு விதி 11-ன் கீழ் இந்த ஆய்வு ஆண்டுதோறும் நடைபெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆய்விற்கு வராத வாகனங்கள் இயக்கப்படுவது கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் மாத இறுதிக்குள் அனைத்து பள்ளி வாகனங்களும் மறுஆய்வுக்கு வர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். எஸ். மகேஸ்வரன், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. சி.க. ஜெயதேவ்ராஜ், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி இரா. காயத்ரி, மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திரு. அ.க. தரணீதர், திரு. பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக